பாகிஸ்தானுக்கு எதிரான ‘No Handshake’ யோசனையின் பின்னால் இருந்த மனிதர்

ஆசியக் கோப்பை 2025–இல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், கிரிக்கெட் பக்கம் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. ஆனால், போட்டிக்குப் பிறகு நடந்த “No Handshake” சம்பவம் தான் ரசிகர்களிடம் பெரிய விவாதமாக மாறியது. இந்தியா கேப்டன் சூர்யகுமார், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் அவர்களின் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது, பாகிஸ்தான் டிரசிங் ரூம் முன் கதவு மூடப்பட்டது போன்ற நிகழ்வுகள் பேச்சு பொருளாகின.

பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, சூர்யகுமார், “பஹல்காம் தாக்குதலை நினைவூட்டும் ஒரு மெசேஜ் அனுப்பவே இதை செய்தோம்” என்று விளக்கம் அளித்தார். ஆனால், இந்த யோசனை அவருடையதல்ல என்று பின்னர் தெரியவந்தது. Telecom Asia Sport ரிப்போர்ட் படி, இதற்குப் பின்னால் இருந்தது இந்தியா ஹெட்கோச் கவுதம் கம்பீரே. அவர் வீரர்களிடம், “சோஷியல் மீடியாவை தவிருங்க, வெளியிலிருந்து வரும் சத்தத்தைக் கவனிக்காதீங்க. பஹல்காமில் நடந்ததை மறக்காதீங்க. கை குலுக்கவேண்டாம், பேசவேண்டாம். மைதானத்தில் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை காட்டுங்க. இந்தியாவுக்காக வெல்லுங்க” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

போட்டிக்குப் பிறகும் கம்பீர், ஆசியக் கோப்பை இந்தியா ப்ராட்காஸ்டரிடம் பேசியபோது, “இது ஒரு நல்ல வெற்றி தான், ஆனால் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒற்றுமையைக் காட்டும் விதமாகவே இந்த செயல் நடந்தது. அதோடு Operation Sindoor-ஐ வெற்றிகரமாக நடத்திய இந்திய இராணுவத்திற்கும் நன்றி. எப்போதும் போல நம் நாட்டுக்காக பெருமையுடன் விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இத்துடன் முடிந்துவிடவில்லை. Super 4 சுற்றில் இரு அணிகளும் மீண்டும் மோதும் வாய்ப்பு அதிகம். இறுதிப் போட்டியிலும் சந்திக்கலாம் என்பதால், “No Handshake” சம்பவம் இன்னும் பல நாட்கள் ரசிகர்களிடையே பேசப்படும் என உறுதி.

(Tamil Craze)

Scroll to Top