ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது டிஜிட்டல் விளம்பர துறையில் போட்டி விதிகளை மீறியதாக கூகுளுக்கு €2.95 பில்லியன் ($3.5 பில்லியன்) அளவிலான பெரும் அபராதத்தை விதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐரோப்பிய கமிஷன் கூகுள் தனது விளம்பர தொழில்நுட்ப சேவைகளை முன்னிலைப்படுத்தி, போட்டியாளர்களுக்கு அநீதி செய்தது உறுதியானது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூகுள் உயர் கட்டணங்களை வசூலித்து, சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
கூகுள் இத்தகைய செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தவும், விளம்பர வழங்கல் சங்கிலியில் உள்ள முரண்பாடுகளை நீக்கவும் EU உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான நடவடிக்கைகளை 60 நாட்களுக்குள் அறிவிக்க கூகுளுக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. 2023 இல் கூகுளுக்கு விதிமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. EU-வின் கூற்றுப்படி, கூகுள் 2014 முதல் தனது சேவைகளை முன்னிலைப்படுத்தி, விளம்பர சந்தையில் அநியாய ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
இந்த €2.95 பில்லியன் அபராதம், ஐரோப்பாவில் கூகுளுக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும்.
(Tamil Craze)